12/28/2011

               சில  நேரம்
               என்னோட  நான்,
                அழியணும்' னு
                நினைக்கிறேன்.

               பிற  நான்' கள்
               பரிச்சயமாகையில் ;
      
              மண்ணும்  மனிதரும்
              எண்ண வாசனையும்
              அட.........சில நேரம்
              என்'னின் நானை
              நேசிக்கிறேன்  நானே!    
 

12/25/2011

என்  கோலம்
               கோலங்கள்
                ~~~~~~~~~~~
  மார்கழி  மாதங்களில் அம்மாவின்  கோலங்களால்  மிளிரும்  வாசலின்  அழகில்  நான் கர்வப்பட்டதுண்டு. காலையிலேயே  குளித்து  தலையில்  துண்டோடு  அம்மா  கோலமிட நான் என்னை scarf  இல்  நுழைத்துக்  கொண்டு  பார்த்துக் கொண்டிருப்பது  பரவசமான  அனுபவம். சில சமயம்  கலர்  போட நானும்  உதவியதுண்டு .
 கிழமைகளுக்கேற்றவாறு ஒரு வித  திட்டமிடலோடு  நடைபெறும். பூகோலம் புள்ளிக்கோலம், சிக்குக்  கோலம், கட்டைக் கோலம் , இழைக்கோலம், ரங்கோலி  என  பலவகைகள்.  ஏகாதசி  அன்று  ரதம், துவாதசி  அன்று  பரமபதம் , திருவாதரை அன்று  தேர்  என்று  எல்லாமே எங்கள்  வீட்டு வாசலில்  எழுந்தருளி இருக்கும். கையெடுக்காமல் ஆரம்பித்த  அதே  அளவில் அம்மா  வரைந்தது  போல  எனக்கு  வரவே வராது.  ஆனாலும் அது வெளியில்  தெரியாத வண்ணம் சரி செய்யத்  தெரியும். இரண்டாவது  தங்கை  அம்மாவை  போலவே  கோலங்கள்  வரைந்து  காண்பவர்  கண்ணை  கவர்வது  மட்டும்மின்றி  போட்டியிலும்  கலந்து  பரிசு வாங்கும்  இயல்பினள்.  முதல் தங்கை  போடுவாள்  ஆர்வம் மீறி  அவள்  உடல்நிலை  ஒத்துழைக்காது
  எதிர் வீட்டுக்கும்  சேர்த்தே அம்மா கோலம்  போட்டு விடுவதால் , அவர்கள்  ஏதேனும்  நாள் கிழமைகளில் " மாமி நாளைக்கு  கொஞ்சம்  இடம்  விடுங்கள்  " என்று கெஞ்சாத  குறையாக அனுமதி கேட்பார்கள்.  காலையில் கோலம்  போட்டு  முடிந்தப் பின்  ராக்கியப்ப  முதலி தெருவில் ஒரு  சுற்று வருவேன். சீக்கிரமே  எழுந்து  அம்மா போட்டு விடுவதால் , எல்லாரும் "அதற்குள்  அம்மா கோலம் போட்டாங்களா?" என்று  பிறர் கேட்கும் பொது ஒரு வித  கர்வம்  கொண்டு பதில்  கூறுவேன்.
வீட்டு உரிமையாளர்  காலையில் 6 மணிக்கு  கிளம்பும்போது  வாசல்  கோலத்தை பார்த்து " மாமி கோலத்தை  போட்டோ  எடுத்து பேப்பருக்கு  அனுப்புங்களேன்" என்று  சொல்லிவிட்டு போகும் போது அப்பா  "வேலைவெட்டி இல்லாமல் இவளொருத்தி கோலம்  போடுவாளாம், அதை பேப்பருக்கு  வேறு அனுப்பனுமாம் " என்று  முணுமுணுப்பார். அப்பா பாட்டியும் சரி, அத்தைகளும்  சரி கோலம் போடுவதில்  எல்லாம் அவ்வளவு  தேர்ச்சியில்லை, அதனால்  அம்மா கோலம் போட ஆரம்பித்தால்  அப்பாவின்  முணுமுணுப்பும் ஆரம்பித்துவிடும். அம்மா அதற்கெல்லாம்  அசருகிற  ஆள்  இல்லை அப்போது.  எல்லோருக்கும்  எப்படி  போடலாம்  என்று ஐடியா  தருவார்.  எங்களுக்கும்  எந்த  கோலத்திற்கு  எப்படி கரை  போடவேண்டும், இரட்டை கோடுகள் போட வேண்டிய  கோலம், காவி போட்டு போட வேண்டியது எது, கலர் போடுவது  எப்படி, கிழமைகளில்  போட வேண்டிய கோலம், சாமி அருகில் எப்படி போடவேண்டும் என்று  சொல்லி தந்ததை  எல்லாம் நாங்கள் இன்னமும்   கடைபிடிக்கிறோம்.

                                              அழகிய  கோலம்
                                               அலங்கோலமாய்
                                               அதிர்கிறது
                                               என்னுள்.........

12/09/2011

     நீ  வனைந்த  கூடு.
     நீ  வளர்த்த  குஞ்சு,
     இருந்தேன்  ,
     இயல்பாய்..

    பயிற்றுவித்தாய்
     பயமின்றி  பறக்க
    பறவையாய் :
    மூச்சு  முட்டுகிறது
    உன் கூடு
    பறவை
    எனக்கு.



சில மாதங்களுக்கு முன்  நான் ஆர்பரித்த  கவிதை  வரிகள் .  உண்மையின்  தரிசனத்தில்  அடக்க  முடியாத  துயரத்தின்  நிழல்  என் மீது  படுகையில்  மயங்கி  மருகுகிறேன்.

ஆளுமை  மிகுந்தவர் அம்மா . அன்பால்     மட்டுமின்றி        சமயத்தில்   அடக்குமுறையாலும்  தனது  ஆளுமையை செலுத்தியவர்.  குடும்ப  விழாக்கள், நிகழ்வுகள்  அவரின்  விருப்ப படியே  நடைபெறும். சங்கடங்கள்  எல்லாம்  அம்மாவால்  சுமுகமாய்  மாறிவிடும்.  " லலி என்ன  சொல்லியது " என்று  அம்மா  வீட்டு   உறவுகளும்  , " மாமி  என்ன  சொல்றீங்க நீங்க "   என்று அப்பா  வீட்டு   உறவுகளும்  அம்மாவின்  ஆளுமையின்  பிடியில்  நல்ல  பல  பலன்களின் கதகதப்பை  உணர்ந்தவர்கள்.   

உடம்பு  சரியில்லை  என்று  தகவல்  வந்தால் , எங்களை  நாங்களே  பார்த்துக்கொள்ள  அறிவுறுத்திவிட்டு  உடன்  சென்று விடுவர்.  மருத்துவர்  முதல் தாதி  வரை  எல்லோருடனும்  இணக்கமாகி  அந்த  சூழலை  சாதகமாக்கிக்  கொண்டு விடுவார். அப்புறமென்ன  அம்மா  அழைத்தால்  உடன்  வந்து  சிறப்பான  சிகிச்சையை  தந்துவிட்டே  செல்வார்கள்.  அம்மாவின்  கைபிடிக்குள்  இருந்த வரை  நானோ  எனது  தங்கைகள்,  தம்பியோ  உடல் நிலை  சரியில்லை  என்று மருத்துவமனை  சென்றது  மிக  மிக  அரிதான  நிகழ்வு. அம்மாவும்  கூட தான்  தனது  பேறு காலததை  தவிர்த்து  தனக்கென்று  மருத்துவமனை  சென்றது  கிடையாது. இரு முறை  சுய நினைவின்றி  சென்று  மருத்துவமனையில்  அனுமதிக்கப் பட்டார்  ஒரு முறை  முதல்  முறை  மீண்டு  வந்தார். மறு முறை  மாண்டு  வந்தார்.

அம்மா  ரசனைகள்  நிறைந்தவர்.     வாசிப்பு, வரைதல், கோலம், பின்னல், சமையல்  எல்லாவற்றிலும்  தன் தனித்துவம்  மிளிர செய்வார்.  மார்கழி  மாத காலங்களில்  தெருவை  அடைத்து  அம்மா  வரையும்  கோலங்கள்  எல்லோரையும்  பிரமிப்பில் ஆழ்த்தும்.  70  களில் ஊடக வெளிச்சம்  இல்லாத  காலமது ,' மாமியின்  கோலத்தை  போட்டோ  எடுத்து  பேப்பர்  காரனிடம்  அனுப்ப வேண்டுமென்று ' ராக்கியப்ப  முதலி தெருவின்  மாமாக்களும், மாமிகளும்  விமர்சித்த காலம் அது. அப்பா  இன்னும்  கொஞ்சம்  கோபம்  அதிகமாக  முனு முனுத்துச்  செல்வார்.   நான் முதன்  முதலில்  தொடர்கதை  என்று படித்தது  அம்மா  வாங்கும்  கல்கியில்  தான்.   ஏழு  அல்லது  எட்டு  வயதிருக்கும்  அப்போது   வந்த  கண்ணதாசனின், ' சேரமான்  காதலியை . சுட சுட  படிப்பது  மிகவும்  பிடித்த ஒன்று.  ஒரு முறை  அத்தை  பார்த்து  புகார் செய்தப்பின்  மறைத்து  படிக்க  ஆரம்பித்தேன்.   வீட்டு கொலுவில்  அம்மாவின்  கைவண்ணத்தில்  உருவான  முத்தாலான துளசி செடி, தேர், பொம்மை  போன்றவை  தான்  பெரும்பாலானவைகள்.  அம்மா வரையும்   காமாக்ஷி, லஷ்மி, சரஸ்வதி  எங்கள்  வீட்டு  கொலுவின்  சிறப்பான அம்சம். ( நவராத்திரி  பிறிதொரு  கட்டுரையாக  வரும் அளவிற்கு   சிறப்பானது)   எளிமையான  சுவையான  உணவுகளை  சமைத்து  எங்களை  அசர வைத்தார் . இவையெல்லாமே   அவர்பால்  எனக்கு  ஒரு பிரமிப்பை  தரவல்லன எப்போதும்.

பூஜை  புனஸ்காரங்களில்  ஆழ்ந்த ஈடுபாடும் பிடிப்பும்  உள்ளவர்.  வெள்ளிகிழமைகளில்  நெய்விளக்கின்  வாசனை, பத்தியின்  மணம் , சாம்பிராணியின்  புகை  எல்லாமே ஒரு  தெய்வீக  மணம்  கமழும்  சூழலை  உருவாக்கிவிடும்  எங்கள்  வீட்டில். ஸதோத்திரங்கள், அஷ்டகங்கள், சகஸ்ரநாமங்கள், சௌந்தர்யா லஹரி  எல்லாம்  அம்மாவின் இனிய  குரலில்  ஸ்பஷ்டமாய்  ஒலித்த  போது சுகானுபவமாய்  இருந்த  காலமது.  நாங்களும்  அம்மாவுடன்  சேர்ந்து  சொல்ல  சொல்லித்தந்தார். ஒருக் கட்டம்  வரை  அந்த  தெய்வீக  அனுபவத்தில்  லயித்தும்  இருந்தேன்.  இவ்வளவு  நியமமாய்  இருந்தும்  மகாளைய அமாவாசை, நவராத்திரியின்  முதல்  நாளில்  நடு சாலையில்  நேர்ந்த  அந்த  விபத்து  அவரை  பலிக்  கொண்டதை  தடுக்க  ஏதொன்றும்  நிகழவில்லையே!

 தம்பி  இறந்த  3  ஆண்டுகளில்  அவர்  ஒரு  நடைபிணம்  ஆகியிருந்தார். சுந்தர காண்டம்  பாராயணம்  செய்து , ராமரின்  ஜென்ம  நட்சத்திரத்திலேயே  அவனும்  பிறந்த  போது தனது  பூஜையின்  பலன் என மகிழ்ந்து இருந்தார்.   தம்பியின்  மரணம்  அம்மாவை  பல விதத்திலும்  பாதித்தது.  மிகுந்த மன உளைச்சலும் , சோர்வுமாய் ஆர்வமற்று  இருந்தார். அளவுக் கடந்த  இன்னலில் . தனக்கு  எதிரான  சூழ்நிலையிலும்  தன் சுயமரியாதையை நிறுவியவர்.  துணிச்சலும், தைரியமும்  அவரால்  எங்களுக்கு  பயிற்றுவிக்க பட்டது  போக  அம்மாவை , அம்மாவின்  இயலாமையை  என்னால்  ஏற்றுக் கொள்ள  முடியாது போனது  என்னால்...     அவரின்  நிலை  நன்கு  புரிந்தும்   அவரை  சங்கடப்  படுத்தியிருக்கிறேன். நான்.  அதற்காய்  உடன்  வருத்தப் பட்டதும்   உண்டு.  மௌனமாய், சில சமயம்  வார்த்தையாலும்  அம்மாவின்  நிலைமை  தாங்க மாட்டாது எதிர்வினையாற்றியுள்ளேன்.

                                                 பெற்றவளாய்  அல்ல ,
                                                  போற்றுவேன்  போராளியாய்.
 என்றே  என் கவிதை  ஒன்றும்  உண்டு.

 உறவு, நட்பு  வட்டங்களில்  இருவருக்கிடையே  ஏற்படும்  பேதங்களை  மாற்றி  உறவாட, நட்பாட  செய்வதில்  வல்லவர். இன்று  அம்மாவை  பிரிந்து  பேதலித்து  கிடக்கும்  நான்..........






8/29/2011

                                வன்ம வார்த்தைகள்                           
                                விஷம்  தோய்ந்த 
                                அம்புகளாய் 
                                குறிப்பார்த்து 
                                 எய்யப்படுகின்றன.............
           
                                                        இவருக்குள் 
                                                        அவரும் 
                                                        அவருக்குள் 
                                                         இவரும்

                               ஆற்றாமையின் 
                               செத்தப் பாம்பை
                               அடித்துத் 
                               துவைக்கிறார்கள்  .......     
                               தீர்ந்து  விடுமோ 
                                எல்லாமும்!

                                                            சுட்ட வெண்சங்காய் 
                                                            பளீரிடுகிறது 
                                                            இயலாமையின் 
                                                            ஆதங்கங்கள்.


                   பூப்பேன்........
                   காயப்பேன்.....
                   வளர்தல்  பிழை
                                                    ---என
                   அளவாய் ,                
                    அழகாய் 
                    வெட்டப்படும் 
                     போன்சாய்        
                                                   ---அல்ல,
                      விழுதிறக்கி,
                      மண்ணுள் 
                      ஊடுருவி 
                      நிலைக்கும்
                          ஆல்(ள்)
                                                 ---நான்.........

8/28/2011

                        உன் 
                        வட்டம் 
                         பார்வை 
                        கோணம் 
                         என்னுள் விளைக்கும் 
                         இம்சை 
                         இன்னது  தான்  என்றில்லை.
                        

                          எனது ' நான் '
                          எனக்கே 
                           புரிபடாதிருக்கையில் 
                           உனது  புரிதலில் 
                           உடன்பாடில்லை.
   

                           உன் பிம்பமாக்கி 
                            என்னை  தொலைக்கும் 
                            உன்   முயற்சிகளில்.
                           
                           பெற்றவளாய்  முடியல;
                          போராளியாய்  போற்றுவேன்.
                           
            

4/10/2011

      வறுமை 
       வலி
       வேதனையை 
       விழுங்கிச் 
                           செரித்தோம்   
       வாழ்வு 
       களிப்புற..............
       
      அவரவர் 
      அபிலாஷைகளில் 
      அநாதியாய்
     அலைந்துழன்றோம் 

     பிராயங்களில் 
     சண்டைப்  போட்ட  
     மரப்பாச்சி 
                          ---  இன்று 
   ஆளுக்கொன்று  
   வாங்கிட 
    வகையிருந்தும்
    வசமாகுதில்லை  

3/26/2011

       
அன்றும்  புலர்ந்தது  பொழுது வழமைப்போல்.  அவசர, அவசரமாய்  கிளம்பி  பேருந்தைப் பிடித்து  அலுவலகம் போய் "அப்பா " என்று இருக்கையில் அமரும் வரை .காத்துக்கொண்டிருக்கும்  அலுவல்களால்  நான் ஆட்கொள்ளும் முன்னரே, வந்தது  அந்த  தொலைபேசி  அழைப்பு. இவ்வளவு  காலையில் யாராய் இருக்கும்  என்று யோசனையோடு  ரிசீவரை  கையில்  வாங்கியவுடன்  நான் பேசக் கூட திராணியற்று , நிசமாகவா  என்று கேட்கும் போதே,  அழுகை  வெடித்துக்  கிளம்ப , தகவலை உறுதி  செய்துக் கொள்ளும்  விதமாக, மருதவாணன்  அய்யாவை  கேட்க , அவர் சொல்வதை முழுதும் கேட்கும் மனநிலையில்   நானில்லை  அப்போது.  மேலாளரிடம்  செய்தியைச்  சொல்லிவிட்டு  என்  பொறுப்புகளை  அவரிடம்  ஒப்படைத்து  விட்டு,  CEO  விடமும்  தகவலை  சொல்லி நான்  அலுவலகத்தை  விட்டு ஒரு வழியாக  புறப்பட்டு விட்டேன்.  CEO , மேலாளர்  இருவருமே  என்னை  நன்கு  உணர்ந்தவர்கள் ஆனதால் , என்னை  எவ்வளவு  விரைவாக  விடுவிக்க  முடியுமோ  அவ்வளவு  சீக்கிரமாக  விடுவித்தனர்.
                                                       இல்லாமை 
                                                      இம்சையில்'தான் 
                                                      இருப்புகளின் 
                                                      அர்த்தங்கள் 
                                                      புலனாகின்றன
ஒப்பனைகள்  புனைந்து , மிகையான  கனவுகளில்  உலவுகின்ற முகமுடி  உறவுகளிடையே , அந்நியமாய்  குழம்பி  நிற்கையில் , அன்பாய், அனுசரணையாய்  என்னையும்  புரிந்துக் கொண்டு  நேசங் காட்டியவர். சமுக சீழ்க்கையால் படியும்  மன அழுக்குகள் , அவரைப்  பார்த்து பேசிய கணத்திலேயே  கரைத்து  விடும்  இயல்பினர்  அவர்.
                பொருளியல் துறை பேராசிரியர்  தங்கமணி  அவர்கள்  தமது  சமுதாய  பணிகளால்  தஞ்சாவூரில்  சமுக நோக்கு  சார்ந்து  இயங்குபவர்களால்  பெரிதும்  போற்றப்படுபவர்  ஆவார். அவரது நெருங்கிய  நண்பர்கள்  வட்டத்தில்  GB  என்று அழைக்கப்பட்டார். மணியாக  தங்க  மணியாக  அவர் ஆற்றிய  பணிகள்  எண்ணற்றவை. 
                உதவிகள் செய்வதற்காகவே உயிர்  வாழ்ந்தார். இடது கை  கொடுப்பதை, வலது  கை அறியாது அவர்  செய்த  உதவிகளால்  வாழ்ந்துக்  கொண்டிருக்கும்  என்னைப்  போன்ற  பலரே  சாட்சி. அவர் பணியாற்றிய  கல்லூரி மாணவியாகட்டும், சகபேராசிரியர்களானாலும் , சக அலுவலக  கடை  நிலை  ஊழியர்  ஆனாலும் சரி துயருறும்  போது அழைக்காமல்  அவரே  சென்று  தம்மாலான  உதவிகளை  செய்துக் கொண்டிருப்பார்.  தவறானப்  பாதையில்  செல்ல  முற்படும்  மாணவிகளின்  சூழ்நிலையை  ஆராய்ந்து , இதமாகச்  சொல்லிப்  புரியவைத்து  நல்வழிபடுத்தினார். நியாயமான  விருப்பங்கள்  எனில், உடனிருந்து  எவ்வித  எதிர்ப்பு வந்தாலும்  போராடி  பெற்றுத்தருவார்.
                   என்னை  விசாலமாக்கியதும்  அவருடைய  அன்பும், பரிவும், தோழமையும் தான். குறுகிக்  கூனிப்போயிருந்த நான் நிமிர்ந்துப்  பார்க்கலானேன்.  பரந்துப்பட்ட  இந்த உலகம் அறிமுகமானது; என்னைப் பிடித்திருந்த அறியாமையும்  மூடப்  பழக்கங்களும்  கூட அகன்றன. அளப்பரிய  அவருடைய அன்பில்  மூழ்கியவர்கள்  மட்டுமே உணரமுடிந்த  அந்த மடை தடைப்பட்டுவிட்டது.
                        கண்களில்  நீர்வழிய  நினைத்துப் பார்க்கிறேன் .......... வாசல்  கம்பிக்  கதவைத்  திறந்தவுடன், முகம் மலர எதிர்க் கொண்டு "வாப்பா" என்று  வாஞ்சையுடன்  அழைக்க  அருளகத்தில்  அவரில்லை எனும்  உண்மை  முகத்தில்  அறைகிறது. பிரச்சனைகளின்  பாதிப்பால் தளர்ந்து , கனத்துப்  போய் வருவேன்  அவரிடம், பறக்காதக்  குறையாய் லேசாகித் திரும்புவேன் . வீட்டுக்கு  எடுத்துச்  செல்ல அவர் தரும் பொருள்களால் கை கனக்கும்.
                         பிரக்ஞையற்று  படுத்துக்  கிடக்கும்  இது  பொய்யாய். புனைவாய்ப் போகாதா; ஏதேனும் , ஏதேனும்  அதிசயம் , அற்புதம் நிகழ்ந்து  விடக் கூடாதா, என்று நானும் , அங்கு கூடியிருந்த பலரும் ஏங்கினோம். அவரிடம்  பயின்ற பகுத்தறிவு  பயனற்றுப்  போனது; தொண்டை அடைக்க , தலை  கிறுகிறுப்பதை  அன்றுதான்  அனுபவமாய்  உணர்ந்தேன்.
                           எனது  சந்தோசத்தையும்  சரி, சங்கடத்தையும்  சரி , நான் பகிர்ந்துக்  கொள்கிற முதல் நபர் அவர்தான். தோழமையுடன்  அவரும்  அவ்விதமாக பகிர்ந்துக் கொள்ளும் நேரங்களில்  நான் பெருமிதம்  கொண்டிருந்தேன்.  பணி ஓய்வு  பெற்றப்  பின்னும் , இப்போது  போல  எல்லோருக்கும்  உதவி  செய்ய இயலுமா என்று அவர் அச்சப் பட்டார். அதனால்  தானோ  என்னவோ  முன்னரே எல்லாவற்றிலிருந்தும்  ஓய்வெடுக்க  அவர்  சென்றுவிட்டார்.
                                   வார்த்தை ஜாலத்திற்காய்  அல்ல அபரிதமான  அவரின் அன்பு  என் ஆயாசங்களை  அலசிப்போடும் . இப்போதும் , இப்போதும்  அப்படியே உணரத்  தலைபடுகிறேன். ஆனால் யதார்த்தம்  என்னை உடைத்து  நொறுக்கி  போடுகிறது. வழமைக்கு  மாறாய் இதயம் கனக்க அருளகத்தில்  இருந்துக்  கிளம்பினேன் , அவரும்  அங்கிருந்து  கிளம்பிய போது, அவரின் நினைவுகளை  இறுகப் பற்றிக் கொண்டு.......... 
                                                             என்னை 
                                                          தன்னை 
                                                          எல்லோரையும் 
                                                          தாமாய்
                                                          பாவிக்கும் 
                                                          இலக்கணம்.
 







3/11/2011

            சுகன்  நல்ல  நண்பர்,  அவரது   அம்மாவோ  மிகவும்  அணுக்கமானவர். அதனால்  சுகன் உடனான  எனது  நட்பு  இன்னும்  பலமானது. என்று  கூறலாம். 
                        சுகன்  அம்மா  நினைவில் ..........


விட்டு விட்டுப்  போனாலும் 
விலகாத   நினைவுகளில் 
ஆழ்வதும்,
 ஆற்றுப்படுதலும்
 மீள்வதுமாக
 காலத்  தோணி
                                        __எனைக் 
 கடத்திப்   போனாலும் 
 கல்வெட்டாய்    மனதில் 
 கனமான  பதிவுகள் 
 கடந்தும்  விடக்  கூடுமோ?
 கணந்தோறும் 
 அல்லவேனும் 
 மறக்க  முடியாத 
 நினைவுகளின்   பிடியில் 
 ததும்புகிறேன் 
 நான்!
                   09 / 03 /2009  அம்மாவின்  நினைவு  நாளில்  வாசித்தது.
 
 













 

3/01/2011

வார்த்தையில் 
வனையவியலா
அன்பு,
பரஸ்பரம்
புரிந்தும்
உணரப்படாமலேயே 
காற்றில்.

.    
அறிவின்  செருக்கில்,
அறியாமை   நிழலில்,
அச்சம்  தவிர்த்து 
நம்பிக்கை   வசந்தத்தில் ,
எல்லாமிருந்தன,
ஏதுமற்று !
நிரம்பியும்  வழிந்தன
கோப்பைகளே 
இல்லாமல்!
தளும்புகிறேன்,
  நான்
நிகழ்வின்  தரிசனங்களில்
நீயுமில்லாது ..   
திறப்பதற்கு   அல்ல,
  கதவைத்
தட்டவே 
தயங்கி .............

விலக்குதற்கு  அல்ல
  திரையைக
காண்பதற்கும்  
விழையாத 

உன்னை
என்னை
உலகை
மதிப்பிட

யார்  நீ ? (நான்) 

2/14/2011



           தேவதைகளின்
           உலகில்
           பிரவேசி்த்தேன்  ..
           சாதுவாய்,
           சமர்த்தாய்,
           சண்டியாய்,
           அழகழகாய்
            என்
           தேவதைகள்.

          மாய, யதார்த்த
          புனைவுகளில் மிதப்பன.
          அவ்வப்போது 
          நிகழுலகுக்கும்
          நழுவி வரும்
         கணங்கள்....
         கள்ளமற்றவை.

        கொப்பளிக்கும்   குறும்பு
         சேட்டைகளில்
         என்
       முகம்  கோண
       வார்த்தை   மவ்னிக்கும்.
.
       பாவனையுடனோ
       அற்றோ
       மன்னிப்புக் கோரி
       மவ்னம் கலைக்கும்
      முனைப்பில்
      கோபம்  கலைத்து
     அணைத்து முத்தமிட்டு
     நெகிழ்த்தி  மலர்த்தும்
     அவற்றின்
     இருப்பே   சுவாசமாய்
             என்னுள்............. 
   
  


1/30/2011

                      எல்லோருக்கும்,
                      எப்போதும்
                      வாய்க்காதன
                      எப்போதேனும்
                       வாய்க்கையில்
                      மகிழ்ச்சியில்  திளைக்க
                      தாகத்துக்கு
                      பருகும்
                      தண்ணிரே
                      விக்கிக்  கொள்வதாய்
                     நான்,  என்
                     இருப்பையும்,
                     இழந்தது ,
                     துப்புக்கெட்டதோ? 
                       




















1/28/2011

                  கூத்து  முடிந்தும்
                                          வேடம்
                 கலைக்க மனமில்லை.
                 கலைத்துப்   போடும்
                 புனைவுகளாய்
                 எதிர்பார்ப்புகள்.......
                மீள   முயல்கிறேன்,
                நிதர்சனத்திற்காய்
                நான். 

          மலர்ச்சாடியை
         பளபளப்பாக்க

         புளியோ
         பிராசாவோ
                      தேய்க்கிறேன்.
         தூண்டலும்
         தீண்டலுமான
         உணர்வை
         எச்சரிக்கையோடு
        அறிவு ஜீவியாய்
        தாண்டுகிறேன்
        அவ்வப்போது.
 

                சங்கடங்கள்,
                சந்தோஷங்களைக்
                காட்டிலும்
                சேகரமாகின்றன.
.
                உணரப்படும்
                வலியின்
               ஆறுதலும்
                மன்னிப்பும்
                மறைக்கவே
               அன்றி
               மறக்க  அல்ல.
  .            
              களவாடப்பட்ட      
              காயான
              பொழுதுகள்
             கனியுமென்று
              நான் .
             
 

1/08/2011

                             என்ன இப்படி?
                             இளைச்சு, கறுத்து,
                              முடியெல்லாம் போய்'னு
                              வருத்தப்பட்டார்
                              அத்தை !
                              வரன் முன்னாடி
                              வாளிப்பாய் இல்லாமல்
                               போனதற்காய்.     

1/07/2011

                   சம்பாஷணைக்கான
                   சங்கதிகள்
                   பரிவர்த்தனைக்கு
                   சாத்தியமற்றதாய்
                   உன்னிடமிருந்து   மாறுபடுகையில்
                   நிசமாக அல்ல
                  பாவனைக்கேனும்
                  காது கொடுக்க
                   முனைபவரிடையே
                  கால நேரம்  மறந்து
                 கொண்டாடுமிடத்து
                 குழந்தையாய்
                  நான்.

1/06/2011

                           எண்ணச்  சிக்கலிடையே
                           என் கையில் ஒருதாள்
                           மடித்தேன்  மேலும்
                           மடித்தேன்,
                           பிரித்து மடித்தேன்
                           மடித்தும் , பிரித்தும்
                           கை அழுக்கேறி
                           காகிதம் கரேல் என்றானது
                           என்  கை? 

1/03/2011

                                      தேவைகள்
                                       அவரவருக்கானவை.
                                       வசதி, வாய்ப்பு ,
                                       நட்பு,  காதல்,
                                      மரியாதை,
                                       நாகரிக நிமித்தம்
                                       பரிசீலிக்கப்படவும்,
                                        மறுக்கப்படவும்,
                                        மறைக்கப்படவும்
                                       ஆகலாம் .....ஆனால்
                                       பரிகசிக்கப்படும்போது
                                        பரிதாபப்படுகிறேன்
                                        உனக்காக.......      

                        மௌன  குறு வாளின்                          குதர்க்கம்                          குறுக்கறுத்து                     ...