12/09/2011

     நீ  வனைந்த  கூடு.
     நீ  வளர்த்த  குஞ்சு,
     இருந்தேன்  ,
     இயல்பாய்..

    பயிற்றுவித்தாய்
     பயமின்றி  பறக்க
    பறவையாய் :
    மூச்சு  முட்டுகிறது
    உன் கூடு
    பறவை
    எனக்கு.



சில மாதங்களுக்கு முன்  நான் ஆர்பரித்த  கவிதை  வரிகள் .  உண்மையின்  தரிசனத்தில்  அடக்க  முடியாத  துயரத்தின்  நிழல்  என் மீது  படுகையில்  மயங்கி  மருகுகிறேன்.

ஆளுமை  மிகுந்தவர் அம்மா . அன்பால்     மட்டுமின்றி        சமயத்தில்   அடக்குமுறையாலும்  தனது  ஆளுமையை செலுத்தியவர்.  குடும்ப  விழாக்கள், நிகழ்வுகள்  அவரின்  விருப்ப படியே  நடைபெறும். சங்கடங்கள்  எல்லாம்  அம்மாவால்  சுமுகமாய்  மாறிவிடும்.  " லலி என்ன  சொல்லியது " என்று  அம்மா  வீட்டு   உறவுகளும்  , " மாமி  என்ன  சொல்றீங்க நீங்க "   என்று அப்பா  வீட்டு   உறவுகளும்  அம்மாவின்  ஆளுமையின்  பிடியில்  நல்ல  பல  பலன்களின் கதகதப்பை  உணர்ந்தவர்கள்.   

உடம்பு  சரியில்லை  என்று  தகவல்  வந்தால் , எங்களை  நாங்களே  பார்த்துக்கொள்ள  அறிவுறுத்திவிட்டு  உடன்  சென்று விடுவர்.  மருத்துவர்  முதல் தாதி  வரை  எல்லோருடனும்  இணக்கமாகி  அந்த  சூழலை  சாதகமாக்கிக்  கொண்டு விடுவார். அப்புறமென்ன  அம்மா  அழைத்தால்  உடன்  வந்து  சிறப்பான  சிகிச்சையை  தந்துவிட்டே  செல்வார்கள்.  அம்மாவின்  கைபிடிக்குள்  இருந்த வரை  நானோ  எனது  தங்கைகள்,  தம்பியோ  உடல் நிலை  சரியில்லை  என்று மருத்துவமனை  சென்றது  மிக  மிக  அரிதான  நிகழ்வு. அம்மாவும்  கூட தான்  தனது  பேறு காலததை  தவிர்த்து  தனக்கென்று  மருத்துவமனை  சென்றது  கிடையாது. இரு முறை  சுய நினைவின்றி  சென்று  மருத்துவமனையில்  அனுமதிக்கப் பட்டார்  ஒரு முறை  முதல்  முறை  மீண்டு  வந்தார். மறு முறை  மாண்டு  வந்தார்.

அம்மா  ரசனைகள்  நிறைந்தவர்.     வாசிப்பு, வரைதல், கோலம், பின்னல், சமையல்  எல்லாவற்றிலும்  தன் தனித்துவம்  மிளிர செய்வார்.  மார்கழி  மாத காலங்களில்  தெருவை  அடைத்து  அம்மா  வரையும்  கோலங்கள்  எல்லோரையும்  பிரமிப்பில் ஆழ்த்தும்.  70  களில் ஊடக வெளிச்சம்  இல்லாத  காலமது ,' மாமியின்  கோலத்தை  போட்டோ  எடுத்து  பேப்பர்  காரனிடம்  அனுப்ப வேண்டுமென்று ' ராக்கியப்ப  முதலி தெருவின்  மாமாக்களும், மாமிகளும்  விமர்சித்த காலம் அது. அப்பா  இன்னும்  கொஞ்சம்  கோபம்  அதிகமாக  முனு முனுத்துச்  செல்வார்.   நான் முதன்  முதலில்  தொடர்கதை  என்று படித்தது  அம்மா  வாங்கும்  கல்கியில்  தான்.   ஏழு  அல்லது  எட்டு  வயதிருக்கும்  அப்போது   வந்த  கண்ணதாசனின், ' சேரமான்  காதலியை . சுட சுட  படிப்பது  மிகவும்  பிடித்த ஒன்று.  ஒரு முறை  அத்தை  பார்த்து  புகார் செய்தப்பின்  மறைத்து  படிக்க  ஆரம்பித்தேன்.   வீட்டு கொலுவில்  அம்மாவின்  கைவண்ணத்தில்  உருவான  முத்தாலான துளசி செடி, தேர், பொம்மை  போன்றவை  தான்  பெரும்பாலானவைகள்.  அம்மா வரையும்   காமாக்ஷி, லஷ்மி, சரஸ்வதி  எங்கள்  வீட்டு  கொலுவின்  சிறப்பான அம்சம். ( நவராத்திரி  பிறிதொரு  கட்டுரையாக  வரும் அளவிற்கு   சிறப்பானது)   எளிமையான  சுவையான  உணவுகளை  சமைத்து  எங்களை  அசர வைத்தார் . இவையெல்லாமே   அவர்பால்  எனக்கு  ஒரு பிரமிப்பை  தரவல்லன எப்போதும்.

பூஜை  புனஸ்காரங்களில்  ஆழ்ந்த ஈடுபாடும் பிடிப்பும்  உள்ளவர்.  வெள்ளிகிழமைகளில்  நெய்விளக்கின்  வாசனை, பத்தியின்  மணம் , சாம்பிராணியின்  புகை  எல்லாமே ஒரு  தெய்வீக  மணம்  கமழும்  சூழலை  உருவாக்கிவிடும்  எங்கள்  வீட்டில். ஸதோத்திரங்கள், அஷ்டகங்கள், சகஸ்ரநாமங்கள், சௌந்தர்யா லஹரி  எல்லாம்  அம்மாவின் இனிய  குரலில்  ஸ்பஷ்டமாய்  ஒலித்த  போது சுகானுபவமாய்  இருந்த  காலமது.  நாங்களும்  அம்மாவுடன்  சேர்ந்து  சொல்ல  சொல்லித்தந்தார். ஒருக் கட்டம்  வரை  அந்த  தெய்வீக  அனுபவத்தில்  லயித்தும்  இருந்தேன்.  இவ்வளவு  நியமமாய்  இருந்தும்  மகாளைய அமாவாசை, நவராத்திரியின்  முதல்  நாளில்  நடு சாலையில்  நேர்ந்த  அந்த  விபத்து  அவரை  பலிக்  கொண்டதை  தடுக்க  ஏதொன்றும்  நிகழவில்லையே!

 தம்பி  இறந்த  3  ஆண்டுகளில்  அவர்  ஒரு  நடைபிணம்  ஆகியிருந்தார். சுந்தர காண்டம்  பாராயணம்  செய்து , ராமரின்  ஜென்ம  நட்சத்திரத்திலேயே  அவனும்  பிறந்த  போது தனது  பூஜையின்  பலன் என மகிழ்ந்து இருந்தார்.   தம்பியின்  மரணம்  அம்மாவை  பல விதத்திலும்  பாதித்தது.  மிகுந்த மன உளைச்சலும் , சோர்வுமாய் ஆர்வமற்று  இருந்தார். அளவுக் கடந்த  இன்னலில் . தனக்கு  எதிரான  சூழ்நிலையிலும்  தன் சுயமரியாதையை நிறுவியவர்.  துணிச்சலும், தைரியமும்  அவரால்  எங்களுக்கு  பயிற்றுவிக்க பட்டது  போக  அம்மாவை , அம்மாவின்  இயலாமையை  என்னால்  ஏற்றுக் கொள்ள  முடியாது போனது  என்னால்...     அவரின்  நிலை  நன்கு  புரிந்தும்   அவரை  சங்கடப்  படுத்தியிருக்கிறேன். நான்.  அதற்காய்  உடன்  வருத்தப் பட்டதும்   உண்டு.  மௌனமாய், சில சமயம்  வார்த்தையாலும்  அம்மாவின்  நிலைமை  தாங்க மாட்டாது எதிர்வினையாற்றியுள்ளேன்.

                                                 பெற்றவளாய்  அல்ல ,
                                                  போற்றுவேன்  போராளியாய்.
 என்றே  என் கவிதை  ஒன்றும்  உண்டு.

 உறவு, நட்பு  வட்டங்களில்  இருவருக்கிடையே  ஏற்படும்  பேதங்களை  மாற்றி  உறவாட, நட்பாட  செய்வதில்  வல்லவர். இன்று  அம்மாவை  பிரிந்து  பேதலித்து  கிடக்கும்  நான்..........






4 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

அம்மாவை நினைவு கூர்ந்த விதம் நெக்குருகச் செய்தது.

நெய்வேலி பாரதிக்குமார் சொன்னது…

இப்படியான ஆளுமைகள்தான் பெரும்பாலான குடும்பங்களை , அரசை, நிறுவனத்தை இயக்குகின்றன . அவர்களது அதிகாரமிக்க ஆணைகள் பலசமயம் கருத்து மோதல்களை ஏற்படுத்துவது போல இருக்கும் , ஆனால் அவர்களது வெற்றிடம் வேறு எவராலும் இட்டு நிரப்பமுடியாதது சுகன் தனது தாயார் பற்றிய நினைவுகளை பகிர்வது போல நீங்களும் பகிரலாம். யதார்த்தமான உங்கள் பதிவின் வெளிப்படைத் தன்மை உங்கள் பதிவை உள்வாங்க வைக்கிறது

manichudar blogspot.com சொன்னது…

எல்லாவற்றின் குவி மையமாய் அம்மா இருந்ததால் , இப்போது அதன் தாக்கத்தை மிகையாய் உணர்கிறேன். சமயத்தில் சுய புலம்பலாய் புலப்பட்டாலும் தவிர்க்க இயலவில்லை .

ஹேமா சொன்னது…

மணிச்சுடர்...மனம் நெகிழ்கிறது பதிவு.அம்மா என்று சொல்லிவிட்டேன் வாய்விட்டு.அம்மாவின் வாசம் தேடுகிறது மனம் !

                        மௌன  குறு வாளின்                          குதர்க்கம்                          குறுக்கறுத்து                     ...