என் கோலம் |
~~~~~~~~~~~
மார்கழி மாதங்களில் அம்மாவின் கோலங்களால் மிளிரும் வாசலின் அழகில் நான் கர்வப்பட்டதுண்டு. காலையிலேயே குளித்து தலையில் துண்டோடு அம்மா கோலமிட நான் என்னை scarf இல் நுழைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பது பரவசமான அனுபவம். சில சமயம் கலர் போட நானும் உதவியதுண்டு .
கிழமைகளுக்கேற்றவாறு ஒரு வித திட்டமிடலோடு நடைபெறும். பூகோலம் புள்ளிக்கோலம், சிக்குக் கோலம், கட்டைக் கோலம் , இழைக்கோலம், ரங்கோலி என பலவகைகள். ஏகாதசி அன்று ரதம், துவாதசி அன்று பரமபதம் , திருவாதரை அன்று தேர் என்று எல்லாமே எங்கள் வீட்டு வாசலில் எழுந்தருளி இருக்கும். கையெடுக்காமல் ஆரம்பித்த அதே அளவில் அம்மா வரைந்தது போல எனக்கு வரவே வராது. ஆனாலும் அது வெளியில் தெரியாத வண்ணம் சரி செய்யத் தெரியும். இரண்டாவது தங்கை அம்மாவை போலவே கோலங்கள் வரைந்து காண்பவர் கண்ணை கவர்வது மட்டும்மின்றி போட்டியிலும் கலந்து பரிசு வாங்கும் இயல்பினள். முதல் தங்கை போடுவாள் ஆர்வம் மீறி அவள் உடல்நிலை ஒத்துழைக்காது
எதிர் வீட்டுக்கும் சேர்த்தே அம்மா கோலம் போட்டு விடுவதால் , அவர்கள் ஏதேனும் நாள் கிழமைகளில் " மாமி நாளைக்கு கொஞ்சம் இடம் விடுங்கள் " என்று கெஞ்சாத குறையாக அனுமதி கேட்பார்கள். காலையில் கோலம் போட்டு முடிந்தப் பின் ராக்கியப்ப முதலி தெருவில் ஒரு சுற்று வருவேன். சீக்கிரமே எழுந்து அம்மா போட்டு விடுவதால் , எல்லாரும் "அதற்குள் அம்மா கோலம் போட்டாங்களா?" என்று பிறர் கேட்கும் பொது ஒரு வித கர்வம் கொண்டு பதில் கூறுவேன்.
வீட்டு உரிமையாளர் காலையில் 6 மணிக்கு கிளம்பும்போது வாசல் கோலத்தை பார்த்து " மாமி கோலத்தை போட்டோ எடுத்து பேப்பருக்கு அனுப்புங்களேன்" என்று சொல்லிவிட்டு போகும் போது அப்பா "வேலைவெட்டி இல்லாமல் இவளொருத்தி கோலம் போடுவாளாம், அதை பேப்பருக்கு வேறு அனுப்பனுமாம் " என்று முணுமுணுப்பார். அப்பா பாட்டியும் சரி, அத்தைகளும் சரி கோலம் போடுவதில் எல்லாம் அவ்வளவு தேர்ச்சியில்லை, அதனால் அம்மா கோலம் போட ஆரம்பித்தால் அப்பாவின் முணுமுணுப்பும் ஆரம்பித்துவிடும். அம்மா அதற்கெல்லாம் அசருகிற ஆள் இல்லை அப்போது. எல்லோருக்கும் எப்படி போடலாம் என்று ஐடியா தருவார். எங்களுக்கும் எந்த கோலத்திற்கு எப்படி கரை போடவேண்டும், இரட்டை கோடுகள் போட வேண்டிய கோலம், காவி போட்டு போட வேண்டியது எது, கலர் போடுவது எப்படி, கிழமைகளில் போட வேண்டிய கோலம், சாமி அருகில் எப்படி போடவேண்டும் என்று சொல்லி தந்ததை எல்லாம் நாங்கள் இன்னமும் கடைபிடிக்கிறோம்.
அழகிய கோலம்
அலங்கோலமாய்
அதிர்கிறது
என்னுள்.........
3 கருத்துகள்:
அம்மா போன்ற எத்தனை படைப்பாளிகள் வெளிப்படாமல் மறைந்து போயிருக்கிறார்கள் . தெருவில் நடந்து செல்லும் போதும், வண்டியில் செல்லும் போதும் முடிந்தவரை அவற்றை அழிக்காமல் செல்ல முயற்சி செய்வேன். அவ்வளவுதான் நாமளிக்கும் அதிகபட்ச அங்கீகாரம் . நல்ல பதிவு . முடிக்கையில் உங்கள் கவிதை அதிரச்செய்கிறது
வணக்கம் சகோதரி.
கோலம் போடுவது ஒரு கலை.
அதிகாலையில் மனதுக்கு புத்துணர்ச்சி தரும் ஒரு மாமருந்து அது.
கடைசிக் கவிதை இன்னும் மனதுக்குள் கோலமிடுகிறது
எனது இந்த ஹ்ய்க்கோ கோலங்களையும் பாருங்கள் .
http://sivakumarankavithaikal.blogspot.com/2010/12/7.html
அம்மா ரசனைகள் நிறைந்தவர். வாசிப்பு, வரைதல், கோலம், பின்னல், சமையல் எல்லாவற்றிலும் தன் தனித்துவம் மிளிர செய்வார். //
இம்மார்கழியில் அவர் மீளாத்துயிலில் அமிழ்ந்துவிட, கோலம் காணா உங்க வீட்டு வாசலின் வெறுமை கடைசிக் கவிதை வரிகளில் எம்முகத்தில் அறைகின்றது தோழி.
கருத்துரையிடுக