அன்றும் புலர்ந்தது பொழுது வழமைப்போல். அவசர, அவசரமாய் கிளம்பி பேருந்தைப் பிடித்து அலுவலகம் போய் "அப்பா " என்று இருக்கையில் அமரும் வரை .காத்துக்கொண்டிருக்கும் அலுவல்களால் நான் ஆட்கொள்ளும் முன்னரே, வந்தது அந்த தொலைபேசி அழைப்பு. இவ்வளவு காலையில் யாராய் இருக்கும் என்று யோசனையோடு ரிசீவரை கையில் வாங்கியவுடன் நான் பேசக் கூட திராணியற்று , நிசமாகவா என்று கேட்கும் போதே, அழுகை வெடித்துக் கிளம்ப , தகவலை உறுதி செய்துக் கொள்ளும் விதமாக, மருதவாணன் அய்யாவை கேட்க , அவர் சொல்வதை முழுதும் கேட்கும் மனநிலையில் நானில்லை அப்போது. மேலாளரிடம் செய்தியைச் சொல்லிவிட்டு என் பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்து விட்டு, CEO விடமும் தகவலை சொல்லி நான் அலுவலகத்தை விட்டு ஒரு வழியாக புறப்பட்டு விட்டேன். CEO , மேலாளர் இருவருமே என்னை நன்கு உணர்ந்தவர்கள் ஆனதால் , என்னை எவ்வளவு விரைவாக விடுவிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக விடுவித்தனர்.
இல்லாமை
இம்சையில்'தான்
இருப்புகளின்
அர்த்தங்கள்
புலனாகின்றன
ஒப்பனைகள் புனைந்து , மிகையான கனவுகளில் உலவுகின்ற முகமுடி உறவுகளிடையே , அந்நியமாய் குழம்பி நிற்கையில் , அன்பாய், அனுசரணையாய் என்னையும் புரிந்துக் கொண்டு நேசங் காட்டியவர். சமுக சீழ்க்கையால் படியும் மன அழுக்குகள் , அவரைப் பார்த்து பேசிய கணத்திலேயே கரைத்து விடும் இயல்பினர் அவர்.
பொருளியல் துறை பேராசிரியர் தங்கமணி அவர்கள் தமது சமுதாய பணிகளால் தஞ்சாவூரில் சமுக நோக்கு சார்ந்து இயங்குபவர்களால் பெரிதும் போற்றப்படுபவர் ஆவார். அவரது நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் GB என்று அழைக்கப்பட்டார். மணியாக தங்க மணியாக அவர் ஆற்றிய பணிகள் எண்ணற்றவை.
உதவிகள் செய்வதற்காகவே உயிர் வாழ்ந்தார். இடது கை கொடுப்பதை, வலது கை அறியாது அவர் செய்த உதவிகளால் வாழ்ந்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற பலரே சாட்சி. அவர் பணியாற்றிய கல்லூரி மாணவியாகட்டும், சகபேராசிரியர்களானாலும் , சக அலுவலக கடை நிலை ஊழியர் ஆனாலும் சரி துயருறும் போது அழைக்காமல் அவரே சென்று தம்மாலான உதவிகளை செய்துக் கொண்டிருப்பார். தவறானப் பாதையில் செல்ல முற்படும் மாணவிகளின் சூழ்நிலையை ஆராய்ந்து , இதமாகச் சொல்லிப் புரியவைத்து நல்வழிபடுத்தினார். நியாயமான விருப்பங்கள் எனில், உடனிருந்து எவ்வித எதிர்ப்பு வந்தாலும் போராடி பெற்றுத்தருவார்.
என்னை விசாலமாக்கியதும் அவருடைய அன்பும், பரிவும், தோழமையும் தான். குறுகிக் கூனிப்போயிருந்த நான் நிமிர்ந்துப் பார்க்கலானேன். பரந்துப்பட்ட இந்த உலகம் அறிமுகமானது; என்னைப் பிடித்திருந்த அறியாமையும் மூடப் பழக்கங்களும் கூட அகன்றன. அளப்பரிய அவருடைய அன்பில் மூழ்கியவர்கள் மட்டுமே உணரமுடிந்த அந்த மடை தடைப்பட்டுவிட்டது.
கண்களில் நீர்வழிய நினைத்துப் பார்க்கிறேன் .......... வாசல் கம்பிக் கதவைத் திறந்தவுடன், முகம் மலர எதிர்க் கொண்டு "வாப்பா" என்று வாஞ்சையுடன் அழைக்க அருளகத்தில் அவரில்லை எனும் உண்மை முகத்தில் அறைகிறது. பிரச்சனைகளின் பாதிப்பால் தளர்ந்து , கனத்துப் போய் வருவேன் அவரிடம், பறக்காதக் குறையாய் லேசாகித் திரும்புவேன் . வீட்டுக்கு எடுத்துச் செல்ல அவர் தரும் பொருள்களால் கை கனக்கும்.
பிரக்ஞையற்று படுத்துக் கிடக்கும் இது பொய்யாய். புனைவாய்ப் போகாதா; ஏதேனும் , ஏதேனும் அதிசயம் , அற்புதம் நிகழ்ந்து விடக் கூடாதா, என்று நானும் , அங்கு கூடியிருந்த பலரும் ஏங்கினோம். அவரிடம் பயின்ற பகுத்தறிவு பயனற்றுப் போனது; தொண்டை அடைக்க , தலை கிறுகிறுப்பதை அன்றுதான் அனுபவமாய் உணர்ந்தேன்.
எனது சந்தோசத்தையும் சரி, சங்கடத்தையும் சரி , நான் பகிர்ந்துக் கொள்கிற முதல் நபர் அவர்தான். தோழமையுடன் அவரும் அவ்விதமாக பகிர்ந்துக் கொள்ளும் நேரங்களில் நான் பெருமிதம் கொண்டிருந்தேன். பணி ஓய்வு பெற்றப் பின்னும் , இப்போது போல எல்லோருக்கும் உதவி செய்ய இயலுமா என்று அவர் அச்சப் பட்டார். அதனால் தானோ என்னவோ முன்னரே எல்லாவற்றிலிருந்தும் ஓய்வெடுக்க அவர் சென்றுவிட்டார்.
வார்த்தை ஜாலத்திற்காய் அல்ல அபரிதமான அவரின் அன்பு என் ஆயாசங்களை அலசிப்போடும் . இப்போதும் , இப்போதும் அப்படியே உணரத் தலைபடுகிறேன். ஆனால் யதார்த்தம் என்னை உடைத்து நொறுக்கி போடுகிறது. வழமைக்கு மாறாய் இதயம் கனக்க அருளகத்தில் இருந்துக் கிளம்பினேன் , அவரும் அங்கிருந்து கிளம்பிய போது, அவரின் நினைவுகளை இறுகப் பற்றிக் கொண்டு..........
என்னை
தன்னை
எல்லோரையும்
தாமாய்
பாவிக்கும்
இலக்கணம்.
3 கருத்துகள்:
முதல்முறை வருகிறேன்.
தலைப்புகளில்லா பதிவுகள் வித்தியாசமாக இருக்கிறது.
வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்..
மணிச்சுடர் நெகிழ்ச்சியான பதிவு .. நல்ல மனிதர்களை நினைவு கூறுதல் அருகி வரும் இக்காலத்தில் அவசியமான பதிவு
அவருடைய அளப்பரிய பணிகளில் இது ஒரே ஒரு துளிதான். அமைதியான புரட்சியை அமரிக்கையாய் அவர் ஆற்றியுள்ளார். அவருடன் நானும் இருந்தேன் என்று நினைக்குந்தோறும் நெகிழ்ச்சியாகிறேன். நன்றி.
கருத்துரையிடுக